தமிழகம்

சக மனிதர்களின் உயிர்தான் முக்கியம்: கரோனா சிகிச்சைக்கு கல்லூரியை ஒதுக்கிய பொங்கலூர் பழனிசாமி

செய்திப்பிரிவு

கோவை

சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கம், விழுப்புரம் கலைஞர் அறிவாலயம், திருச்சி கலைஞர் அறிவாலயம் ஆகியவற்றை, கரோனா வார்டு அமைப்பதற்காக அளிக்க திமுக முன்வந்திருக்கும் நிலையில், கோவையில் தனக்குச் சொந்தமான கல்லூரியை கரோனா வார்டுக்காக வழங்க முன்வந்திருக்கிறார் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி.

தனது ‘கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி’யை 1,000 படுக்கைகள் கொண்ட கரோனா மருத்துவ மையமாக மாற்றிக்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் அளித்துள்ளார். ஆட்சியரும் அதை வாய்மொழியாக ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இக்கல்லூரி கோவையின் புறநகரில் அமைந்துள்ளது. 250 ஹாஸ்டல் அறைகள், 800 கட்டில்கள், 15 ஆயிரம் சதுர அடி கொண்ட ஆடிட்டோரியம், 15 ஆயிரம் சதுர அடி கொண்ட சமையல் கூடம், 30 அடிக்கு 30 அடி நீள அகலம் கொண்ட100 வகுப்பறைகள் என்று பல்வேறு வசதிகள் இக்கல்லூரியில் உள்ளது. இக்கல்லூரியை முழுவதுமாகக் கரோனா வார்டாக மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பொங்கலூர் பழனிசாமி கூறும்போது,

“இங்கே சக மனிதர்களின் உயிர்தான் முக்கியம். சீனாவில் ஆயிரம் படுக்கை கொண்ட மருத்துவமனையை தயார் செய்ய 10 நாள் ஆனது. எனது கல்லூரியில் ஒரே நாளில் 1,000 படுக்கையுடன் மருத்துவமனையை ஏற்படுத்தலாம். ஹாஸ்டலில் 800 படுக்கை வசதி உள்ளது. மேலும் 200 படுக்கை வசதி ஏற்படுத்தினால் போதும். மனிதர்கள் கொத்து கொத்தாக இறக்கிறார்கள். இதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆட்சியரிடம் பேசியபோது திடீர்னு யோசனை வந்தது. உடனே எனது கல்லூரியை, கரோனா சிகிச்சை அளிக்கும் வார்டாக மாற்றும்படி கேட்டுக் கொண்டேன். எனது யோசனையை ஏற்றுக் கொண்டு, உடனே கடிதம் கொடுக்கும்படி கூறினார். முறையாக கடிதம் கொடுத்துள்ளேன். அப்போதுதான் சென்னையில் தலைவர் மு.க.ஸ்டாலினும் அண்ணா அறிவாலயத்தை கரோனா சிகிச்சை அளிப்பதற்காக கொடுத்ததா எனக்குத் தகவல் வந்தது. இவ்வாறு கல்லூரியை கரோனா வார்டா மாற்றியபிறகு, கல்லூரியில் படிக்க யாருமே வரமாட்டாங்களே என்று சிலர் கூறுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் மனிதர்களின் உயிர் தான் முக்கியம். அதுக்கப்புறம்தானே படிப்பு என்று சொல்லிட்டேன்.

கல்லூரி செயல்பட வருஷம் 20 கோடி ரூபாய் செலவாகுது. அந்த அளவு வரவு வேண்டும் என்பது உண்மைதான். கரோனா சிகிச்சைக்காக கொடுத்த பிறகு, ஒருவேளை கல்லூரியில் ஒரு ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லாமல் போகலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் பரவாயில்லை, என்று முடிவெடுத்துட்டோம்” என்றார் பொங்கலூர் பழனிசாமி.

கருணை அடிப்படையிலான இந்த நடவடிக்கைகள் கட்சி எல்லைகளைத் தாண்டி விரிவடையட்டும்!

SCROLL FOR NEXT