தமிழகம்

ஒரு மாத வாடகையை கேட்கக்கூடாது வெளிமாநில மாணவர்கள், பணியாளர்களை வீட்டை காலி செய்யுமாறு கூறினால் நடவடிக்கை: வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வெளிமாநில மாணவர்கள், தொழிலாளர்களிடம் ஒரு மாத வாடகையை கேட்கக்கூடாது என்றும் வீட்டை காலி செய்யுமாறு கூறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 24-ம்தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பல்வேறு உத்தரவுகள் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டு, மாநில அரசுகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் இடம் பெயர்வதன் மூலம், ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக விலகல் நடைமுறை மீறப்படுவதை மத்திய உள்துறை அறிந்தது. இதையடுத்து, வெளிமாநில தொழிலாளர்களின் பொருளாதாரசிக்கலை போக்கவும், தேவையான வசதிகளை செய்யவும் அதன் மூலம்ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தவும் பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுகளுக்கு வழங்கியது.மாநில எல்லைகளை மூடுமாறு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு வழங்கியுள்ள சில உத்தரவுகளின் அடிப்படையில், தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம், சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு வழங்கிய உத்தரவுகள் வருமாறு:

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை மற்றும் தேவை உள்ள மக்களுக்கு தேவையான தற்காலிக தங்குமிடங்கள், உணவு உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும்.

தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவிரும்பும் வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து, அருகில் உள்ள தங்குமிடங்களில் வைத்து, அவர்களை 14 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஊரடங்கால் மூடப்பட்டிருந்தாலும், தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எவ்வித பிடித்தமும் இன்றி உரிய காலத்தில் ஊதியத்தை வழங்க வேண்டும்.

வாடகை குடியிருப்புகளில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட குடியிருப்புகளின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையை கேட்டுதொந்தரவு செய்யக்கூடாது.

வெளிமாநில மாணவர்கள் அல்லது தொழிலாளர்களை தங்கள் வீடுகளில் இருந்து வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT