கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்து கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச சமையல் பெட்டகங்கள் வழங்கி ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் அமைப்பினர் அனைவரையும் நெகிழவைத்துள்ளளனர்.
மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுங்சாலையில் மண்டபம் ஒன்றியத்தைச் சார்ந்த புதுமடம் ஊராட்சியில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இஸ்லாமிய சமுதாய மக்கள் வசித்து வந்தாலும் அனைத்து சமுதாய மக்களுடனும் சமய நல்லிணகத்துடன் மாமான் மச்சான் உறவு முறைகளுடன் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் புதுமடம் ஊராட்சிக்கு மத்திய அரசின் தீன தயாள் உபாத்யாய கிராம விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.
புதுமடத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வணிகம் மற்றும் பணிபுரிந்து பொருளீட்டி வருகின்றனர்.
இவர்கள் இளைஞர் முன்னேற்ற சங்கத்தை ஏற்படுத்தி தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை கொடுத்து ஊராட்சியின் அடிப்படை வசதிகள், மருத்துவம், சுற்றுச்சூழல் காப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தி இருக்கும் நிலையில் புதுமடம் உள்ள இளைஞர் முன்னேற்ற சங்கம் சார்பாக தங்கள் ஊராட்சியை சார்ந்த இந்து கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக பேஸ் புக் சமூக வலைதளம் மூலம் நிதி திரட்டத் துவங்கினர்.
இதற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள பல்வேறு இளைஞர்கள் கடந்த ஒரு வாரகாலமாக நிதி கொடுத்து உதவி வருகின்றனர்.
இந்த நிதியைக் கொண்டு புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர் கூட்டம் , நாரையூரனி, குண்டுத்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஏழை இந்து கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் காமில் உசைன் தலைமையில் திங்கட்கிழமை அரிசி, கோதுமை, தேயிலை, சர்க்கரை, எண்ணெய், சாம்பார் பொடி, பிஸ்கட் ஆகியவை அடங்கிய சமையல் பெட்டகங்களாக வழங்கப்பட்டது.
இது குறித்து இளைஞர் முன்னேற்ற சங்கத்தை சார்ந்த அனிஸ் கூறியதாவது, பேஸ் புக் மூலம் திரட்டிய நிதியைக் கொண்டு உணவு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வந்த கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவியுள்ளோம்.
தொடர்ந்து கிடைக்கும் நிதியில் குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவுகள் வழங்க திட்டமிட்டுள்ளோம், என்று தெரிவித்தார்.
எஸ். முஹம்மது ராஃபி