புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு திரும்பிய 27 பேர் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளில் அனுமதிகக்பப்ட்டுள்ளனர்.
புதுடெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் நாடு முழுவதும் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அவ்வாறு மாநாடுக்கு சென்றுவந்துள்ளவர்களில் ஒருசிலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகிருப்பதால் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவ்வாறு வந்தவர்களைக் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், வள்ளியூர், களக்காடு, அம்பாசமுதத்திரம், தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர் ஆகிய இடங்களில் 23 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 27 பேரின் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கேனும் கரோனா தொற்று உறுதியாகியிருக்கிறதா என்பது பரிசோதனை முடிவுகளில் தெரியவரும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இந்த 27 பேரின் வீடுகள், சுற்றுவட்டார பகுதி வீடுகளில், அவர்கள் சென்றுவந்த பகுதிகளில் உள்ளவர்கள் யாருக்கேனும் கரோனோ அறிகுறிகள் இருக்கிறதா என்பது குறித்து சுகாதாரத்துறை பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1090 வீடுகளும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.