தமிழகம்

தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கை: அமைச்சர் நேரில் ஆய்வு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி வஉசி துறைமுக பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தின் போது துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன், துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சரிடம் விளக்கினார்.

அவர் கூறும்போது, துறைமுகத்துக்குள் வரும் கப்பல்கள் அனைத்தும் எந்த நாட்டில் இருந்து, எந்த தேதியில் புறப்பட்டு வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

கப்பலில் வரும் அனைவரையும் துறைமுக மருத்துவர்கள் முழுமையாக பரிசோதித்த பிறகே கப்பல் துறைமுகத்துக்கு வர அனுமதிக்கப்படுகிறது. துறைமுக மருத்துவர்களுக்கு தேவையான முழுமையான பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 4000 நபர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து வரும் கப்பல்கள் அனைத்தும் புறப்பட்ட நாளில் இருந்து 42 நாள் முடிந்த பிறகுதான் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது.

துறைமுகத்தில் இறக்கப்படும் சரக்கு பெட்டகங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. துறைமுக பகுதியில் சுமார் 500 நபர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் தற்போது 50 நபர்கள் மூலமே பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

தொடர்ந்து அமைச்சர் பேசும்போது, துறைமுக பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை மாவட்ட நிர்வாகம் வழங்கும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் துறைமுகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகளையும், ராட்சத டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

இதில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சின்னப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் காலோன், துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் பீமல் குமார் ஜா, துறைமுக தலைமை மருத்துவ அலுவலர் பூர்ணிமா புரோகித், போக்குவரத்து மேலாளர் பிரபாகர், தலைமை பொறியாளர் ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT