மதுரையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 கடைகளுக்கு மாநகராட்சி ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்கள் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்கு ஓரே பகுதியில் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து சமூக இடைவெளியினை கடைப்பிடிக்கும் வகையில் மதுரை மாநகராட்சியில் 30 தனியார் மளிகை கடைகள் மூலம் வீட்டுக்கே சென்று மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.
தற்போது நடமாடும் வாகனங்களில் காய்கறிகளை வியாபாரிகள் பொதுமக்களை தேடிச் சென்று வழங்கும் திட்டம் தொடங்கி நடக்கிறது.
மேலும், மதுரை மாட்டுத்தாவணி, கீழமாரட் வீதி ஆகிய சில்லறை விற்பனை காய்கறிக் கடைகள் தற்காலிகமாக 14 இடங்களில் நகர்வு செய்யப்பட்டு பரவலாகக் காய்கறிகள் மக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் கிடைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் மதுரை மாரட் வீதி, யானைக்கல், முனிச்சாலை, விளக்குத்தூண், வெங்கலக்கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று செயல்பட்டு வந்த அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளில் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத காரணத்தினால் ஆணையாளர் ச.விசாகன், அந்த கடைகளை ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார். மாநகராட்சி அதிகாரிகள்,
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 35 கடைகளை பூட்டி மறுஉத்தரவு வரும்வரை கடைகளை திறக்கக்கூடாது என எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி ‘சீல்’ வைத்தனர்.