ராமநாதபுரத்தில் கரோனா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி திடீரென உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே கும்பரம் கிராமத்தைச் சேர்ந்த நாகநாதன் மனைவி கோகிலவாணி (61). இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கரோனா சிகிச்சை வார்டில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கரோனா தொற்று உள்ளதா என அறிய மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்த கோகிலவாணி இன்று மாலை திடீரென உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் கேட்டபோது, மூதாட்டிக்கு கரோனா தொற்று இருக்கிறதா என அறிய, ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர் இறந்துவிட்டார். மூதாட்டிக்கு வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளது.
அவர் இறப்புக்கு கரோனா தொற்று தான் என உறுதியாகக் கூற முடியாது. ரத்தப் பரிசோதனை முடிவு வந்தபின் தான் சொல்ல முடியும் எனத் தெரிவித்தார்.