கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஆலோசனைகளை செல்போனில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்வதற்கான ஏற்பாட்டை கோவை அரசு மருத்துவமனையின் நீரிழிவு நோய்த் துறை செய்துள்ளது.
இது தொடர்பாக நீரிழிவு நோய்த் துறையின் தலைவர் டாக்டர் வெங்கோ ஜெயபிரசாத் கூறும்போது, "சர்க்கரை நோய், நுரையீரல் குறைபாடு, சுவாசக் கோளாறு பிரச்சினை இருப்பவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்வரை நோயாளிகளுக்குப் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படாது. கரோனா தொற்றுக்கு உள்ளானாலும் கூட மற்றவர்களுக்கு உண்டாகும் பாதிப்புதான் இவர்களுக்கும் ஏற்படும். எனவே, சர்க்கரை அளவை நோயாளிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
ஊரடங்கு காலத்தில் எந்தெந்த மாத்திரைகளை எப்போது உட்கொள்ள வேண்டும், அரசு மருத்துவமனையில் எப்படி மாத்திரைகளைப் பெறலாம், கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும், வீட்டிலிருந்தபடியே என்னென்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம், திடீரென சர்க்கரை நிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட அனைத்துவித சந்தேகங்கள், கேள்விகளுக்கான விளக்கத்தை சர்க்கரை நோயாளிகள் யார் வேண்டுமானாலும் 8220330350 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் 11 மணி வரை அழைத்துத் தெரிந்து கொள்ளலாம்" என்று டாக்டர் வெங்கோ ஜெயபிரசாத் தெரிவித்தார்.