கரோனா வைரஸ தடுப்புக்கென ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதையொட்டி தேவையில்லாமல் வெளியில் வரும் நபர்கள் மீது போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாகனங்கள் பறிமுதலும் செய்யப்படுகிறது.
வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் காமராஜர், ஏ.வி, பிடிஆர் மேம்பாலம் தவிர, மற்ற அனைத்து தரை, மேம்பாலங்களும் மூடப்பட்டுள்ளன.
இருப்பினும், தேவையின்றி வெளியில் வருவோரைத் தடுக்க, முடியாமல் போலீஸார் திணறும் சூழலும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற 70 பேர் கொண்ட பட்டாலியன் போலீஸ் குழு சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று வந்தது.
இவர்களுக்கு முக்கிய இடங்களில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மூடப்பட்டுள்ள மேம்பாலங்களில் உள்ளூர் போலீஸாரை தவிர்த்து, அங்கு பேரிடர் குழு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வரும் வாகன ஓட்டிகளை கண்டித்து அனுப்புகின்றனர்.