பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

கரோனா பாதிப்பு; கோவை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் வீடு வீடாக ஆய்வு

டி.ஜி.ரகுபதி

கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ள பகுதிகள், வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பு இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று மாநகராட்சி சுகாதாரத் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக, கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, "சாயிபாபா காலனி கே.கே.புதூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள், உக்கடம் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகள், போத்தனூர் கோனவாய்க்கால்பாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சுகாதாரத்துறையினரால் நேற்று முதல் வீடு வீடாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உள்ளதா என விசாரித்து, பரிசோதித்துக் கணக்கெடுத்து வருகின்றனர்" என்றனர்.

காய்கறி விற்க நடவடிக்கை

மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும்போது, " பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வருவதைத் தடுக்க, வாகனங்களில் காய்கறி விற்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 வார்டுகள் வாரியாக வாகனங்கள் மூலம் காய்கறி விற்கப்படும். ஒரு சில தினங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது," என்றார்.

பேருந்து நிலைய மார்க்கெட் மூடல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை புதுப்பேருந்து நிலைய வளாகத்தில், கடந்த சில நாட்களாக அண்ணா காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், அங்கு அதிக அளவில் மக்கள் திரண்டதாலும், சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்றாததாலும் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் இன்று (மார்ச் 31) மாநகராட்சி நிர்வாகத்தினரால் மூடப்பட்டது. அதற்கு பதில் அழகேசன் சாலையில் உள்ள ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு சமூக இடைவெளியுடன் 160 கடைகள் அமைக்கும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இங்கு மார்க்கெட் செயல்படும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT