மதுரையில் ரூ.250 கோடியில் கட்டிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ‘கரோனா’ மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
பரிசோதனையில் ‘கரோனா’ என உறுதிசெய்யப்படும் நோயாளிகள் இந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு சிகிச்சைகள் வழங்குவதற்கு மாவட்டநிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
தென்தமிழகத்தில் மிகப்பெரிய மருத்துவமனையான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அடித்தட்டு மக்களுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் கிடைப்பதற்கு ரூ.250 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டது.
300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த மருத்துவமனையை, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் நரேந்திர மோடி, திறந்து வைத்தார்.
இந்த மருத்துவமனை, தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நிகரான மருத்துவ வசதிகளும், பிரமாண்ட கட்டிடமும் கொண்டிருந்ததால் அடித்தட்டு மக்களுக்கு ஹைடெக் நவீன சிகிச்சைகள் கிடைக்கும் என நம்பிக்கை ஏற்படுத்தியது.
ஆனால், கட்டிடம் மட்டுமே பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்தது. அதற்கான சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
அதனால், இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைநோயாளிகளுக்கு பயனளிக்காதவகையில் பெயரளவுக்கே செயல்பட்டது.
தற்போது ‘கரோனா’ பரவும்நிலையில் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனை, ‘கரோனா’ மருத்துவமானையாக மாற்றப்பட்டுள்ளது.
பரிசோதனையில் ‘கரோனா’ என உறுதிசெய்யப்படும் நோயாளிகள் இந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு சிகிச்சைகள் வழங்குவதற்கு மாவட்டநிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.