தமிழகம்

கரோனா: முன்னாள் அமைச்சர் கேட்ட பிறந்த நாள் பரிசு!

என்.சுவாமிநாதன்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் திமுகவின் குமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், நாகர்கோவில் எம்எல்ஏவுமான முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தனது பிறந்த நாளுக்காக நூதனப் பரிசு ஒன்றை திமுகவினரிடம் கேட்டிருக்கிறார்.

வழக்கமாக சுரேஷ்ராஜன் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லி பலரும் அவரது இல்லத்துக்கு வருவார்கள். இப்போது கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கூடவே, கரோனா தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாக்கும் வகையில் சமூக இடைவெளி விட்டு இருக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் இன்று தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வருபவர்களிடம் நேரில் வருவதைத் தவிர்க்கக் கேட்டு சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார் சுரேஷ்ராஜன். அதில், “இன்று நான் எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். எனவே, என் மீது அன்புகொண்ட கழக உடன்பிறப்புகளும் நேரில் வந்து வாழ்த்துக் கூறுவதை முற்றிலுமாகத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உண்மையில் இந்தப் பிறந்த நாளுக்கு நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பரிசு என்பது, அரசின் அறிவுரைப்படி தொடர்ந்து சமூக விலகலைக் கடைப்பிடிப்பது மட்டுமே.

முகநூலில் எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் செய்திகளைப் பதிவிடுவதற்குப் பதிலாக, ‘நான் சமூக விலகலைச் சரியாகக் கடைப்பிடிக்கிறேன்’ என்று ஒவ்வொருவரும் எனது முகநூல் பக்கத்தில் டேக் செய்யுங்கள். இதுவே நீங்கள் இந்தப் பிறந்த நாளுக்கு எனக்குத் தரும் மிகப் பெரிய பரிசு” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதை ஏற்று குமரி மாவட்ட திமுகவினர் இப்போது, சமூக விலகலைக் கடைப்பிடிப்பதாக சுரேஷ்ராஜனுக்கு முகநூலில் டேக் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT