கரோனா தொற்று உள்ளதா என அறிவதற்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 15 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட அமைப்பினர் பங்கேற்றனர். இவர்களில் சிலருக்கு கரோனோ தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
அதையடுத்து, மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு தற்போது மாவட்ட வாரியாக அவர்களைத் தனிமைப்படுத்தும் பணியை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமையில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வட மாநில இளைஞர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இன்று பிற்பகல் மருத்துவமனையிலிருந்து அவர்கள் மூவரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலை அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதை அறிய இன்று காலை 15 பேருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலையில் ரத்த பரிசோதனை முடிவுகள் தெரியும் என்றும், அதைத்தொடர்ந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.