கோவை மேற்கு மண்டலத்தில் ஊரடங்கை மீறியது தொடர்பாக 3,370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி பெரியய்யா, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நேற்று (மார்ச் 30) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மார்க்கெட், அன்னூர், அவிநாசி சோதனைச் சாவடிகள், கணியூர், பெருந்துறை, விஜயமங்கலம் சோதனைச்சாவடி, நீலாம்பூர் டோல்கேட் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.
கண்காணிப்புப் பணியை முறையாக மேற்கொள்ளவும், சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்றவும் ஐஜி பெரியய்யா வலியுறுத்தினார்.
மேற்கு மண்டல போலீஸ் நிர்வாகத்தில், ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததில் இருந்து தற்போது வரை ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக 3,370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,968 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் 536, ஈரோட்டில் 417, திருப்பூரில் 603, நீலகிரியில் 540, சேலத்தில் 260, நாமக்கல்லில் 259, தருமபுரியில் 110, கிருஷ்ணகிரியில் 645 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கோவையில் 645, ஈரோட்டில் 288, திருப்பூரில் 625, நீலகிரியில் 192, சேலத்தில் 727, நாமக்கல்லில் 584, தருமபுரியில் 125, கிருஷ்ணகிரியில் 764 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் 269 வாகனங்கள், ஈரோட்டில் 221 வாகனங்கள், திருப்பூரில் 425 வாகனங்கள், நீலகிரியில் 35 வாகனங்கள், சேலத்தில் 289 வாகனங்கள், நாமக்கல்லில் 263 வாகனங்கள், தருமபுரியில் 78 வாகனங்கள், கிருஷ்ணகிரியில் 361 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் தமிழக -கேரள எல்லையில் உள்ள 14 சோதனைச்சாவடிகளுக்கும், 13 மாவட்ட சோதனைச்சாவடிகளுக்கும், 41 இடங்களில் தடுப்பு பேரிகார்டர்கள் அமைத்தும், 21 இருசக்கர, 19 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. மேலும், எஸ்.பி. தலைமையில் 1,900 போலீீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.