கரோனா பாதிப்பால் நாடெங்கும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமங்கள், தகுதிச் சான்றிதழ் ஜூன் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என மாநில அரசுகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா தொற்று பரவுதலைத் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்தும் அடைக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் இக்காலகட்டத்தில் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன தரச் சான்றிதழ் உள்ளிட்டவை நீட்டிக்கப்பட்டு ஜூன் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''பிப்ரவரி 1 முதல் காலாவதியாகின்ற ஓட்டுநர் உரிமம், பெர்மிட்டுகள் மற்றும் பதிவு போன்ற ஆவணங்கள் செல்லுபடி ஆகும் காலத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நீட்டித்துள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள ஆலோசனை நெறிமுறையில் அமைச்சகமானது இத்தகைய ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற தேசிய அளவிலான லாக்-டவுன் மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தகுதிநிலைச் சான்று, பெர்மிட்டுகள் (அனைத்து வகை), ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று அல்லது மோட்டார் வாகன விதிகளின் கீழ் தேவைப்படும் இதர ஆவணங்கள் ஆகியனவும் இதில் அடங்கும்.
அனைத்து மாநிலங்களையும் இந்த ஆலோசனையின் அவசியத்தைப் புரிந்து கொண்டு செயல்படுமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அப்போதுதான் பொதுமக்கள், இன்றியமையாத சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள வாகன இயக்குனர்கள் மற்றும் நிறுவனங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகமலும் அதிக சிரமம் இல்லாமலும் செயல்பட முடியும்”.
இவ்வாறு சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.