தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், 7 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை 74 ஆனது.
தமிழகத்தில் கரோனா எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இன்று மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து வெளியில் வருபவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரோனா பாதிப்பில் உள்ளோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், அவர் சென்று வந்த பகுதிகளில் உள்ளோர், அவரது வீடு அமைந்துள்ள 7 கி.மீ. சுற்றளவு பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 74 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:
43 வயதான ஆண், திருவண்ணாமலையில் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர். இவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு நபர் 28 வயதான ஆண். இவர் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை நபருடன் தொடர்பில் இருந்தவர். தற்போது திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் 3 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லி சென்று திரும்பிய குழுவினருடன் பயணித்தவர்கள். இவர்கள் மூவரும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2 ஆண் நபர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் டெல்லி சென்ற குழுவில் பயணித்தவர்கள். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
முதல்வர் பழனிசாமி கூறிய தகவல்
தமிழகத்தில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிப்பில் இருந்தவர்கள் 1,641 பேர். கரோனா வைரஸ் நோய் சந்தேகிக்கப்பட்டு உள்நோயாளியாக தனிப்பிரிவில் இருந்துள்ளவர்கள் 1,925 பேர்.
கரோனா தொற்று நோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமாகி வீட்டிற்குத் திரும்பியவர்கள் 6 பேர். இதுவரை விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 9ஆயிரத்து 234 பேர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்த நபர்களின் எண்ணிக்கை 3,420.
ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,981.வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 537பேர்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி நேற்று கூறினார்.
தற்போது 74 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் சிகிச்சையில் தேறி வீட்டுக்குச் சென்றுவிட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் எண்ணிக்கை 67 ஆக உள்ளது.