சாமிநாதன்: கோப்புப்படம் 
தமிழகம்

ஊரடங்கை மீறிய புதுச்சேரி பாஜக தலைவர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு

அ.முன்னடியான்

ஊரடங்கு உத்தரவை மீறி அரிசி விநியோகம் செய்து கூட்டம் கூட்டிய புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இந்த உத்தரவு அமலில் இருந்து வருகிறது. உத்தரவை மீறுவோர் மீது அந்தந்த மாநில போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டையில் வசித்து வரும் புதுச்சேரி பாஜக தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன், லாஸ்பேட்டை நெசவாளர் நகரில் நேற்று (மார்ச் 30) 10 கிலோ எடை கொண்ட அரிசியை விநியோகம் செய்துள்ளார். இதனால் அங்கு கூட்டம் கூடியுள்ளது. இதனை அறிந்த போலீஸார் விரைந்து சென்று மக்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

மேலும், மக்கள் கூட்டத்தைக் கூட்டியதால் புதுச்சேரி பாஜக தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன், லாஸ்பேட்டை புதுப்பேட் பகுதியைச் சேர்ந்த சோமு, நெசவாளர் நகரைச் சேர்ந்த முத்து ஆகிய மூவர் மீதும் பேரிடர் மேலாண்மைச் சட்டம், தொற்று நோய் பரவுதல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்ததாக இதுவரை மொத்தம் 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,237 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நேற்று ஒருநாள் மட்டும் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 211 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என காவல் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT