தமிழகம்

கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையளிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் 690 படுக்கைகள்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனாவைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 690 படுக்கைகள், 46 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருப்பதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, பொது சுகாதாரம், காவல்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் 12,896 பேர் கள பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளுடன் வருபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு, 690 படுக்கைகள், 46 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உள்ளூர் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு அறையின் தொலைபேசி எண்களான 04427664177, 04427666746, 9444317862 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, அமைச்சர் பா.பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தின்போது பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கரோனா தடுப்பு பணிக்காக ரூ.50 லட்சம் நிதியை வழங்கினார். அதிமுக மாவட்டச் செயலர் வாலாஜாபாத் கணேசன் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

SCROLL FOR NEXT