திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தேகத்தின் பேரில் 18 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் சேவூர்எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை பணி குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா வைரஸ் நோய் சிறப்பு பிரிவு தயார் நிலையில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 806 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்க 33 குழுக்கள் செயல்படுகின்றன.
7 லட்சம் குடும்பங்களுக்கு..
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7,39,354 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 நிவாரண தொகை வீடு வீடாகச் சென்று ஏப்ரல்2-ம் தேதி முதல் வழங்கப்படும். 7,42,602 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விலை இல்லாமல் வழங்கப்படும். 723சத்துணவு மையங்கள் மூலம்சமையல் செய்து 65,660 ஆதரவற்றவர்கள், முதியவர்கள்மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தினசரி உணவு வழங்கப்படுகிறது.
காய்கறி சந்தைகளில் கூட்டத்தை குறைக்க, வாகனங்களில் காய்கறிகளை வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்ய முன் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், 11 பேருக்கு தொற்றுஇல்லை என தெரியவந்தது. 13 பேருக்கு முடிவுகள் வரவில்லை. இதுவரை, சென்னைக்கு ரத்த பரிசோதனை மாதிரி அனுப்பப்பட்டது.
இனி, விழுப்புரத்துக்கு அனுப்பி வைக்கப்படும். சளி, இருமல், காய்ச்சல் உள்ள 18 பேர் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து, இன்று(நேற்று) பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.