தமிழகம்

உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

திருச்சி மேல குழுமணி பகுதியைச் சேர்ந்த வாழை விவசாயி பெரியசாமி(67), கடந்த மார்ச் 25-ம் தேதி விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 28-ம் தேதி உயிரிழந்தார். அவர் சாகுபடி செய்திருந்த வாழைக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டதால், மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

எனவே, தற்கொலை செய்துகொண்ட பெரியசாமி குடும்பத்துக்கும், உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய வாழை விவசாயிகளுக் கும் நிவாரணம் வழங்குவதுடன், வாழையை பிற இடங்களுக்கு கொண்டு செல்வதில் உள்ள இடையூறுகளை களையவும் அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிவ.சூரியன் கூறியது:

குறித்த நேரத்தில் வாழைத்தார் களை வெட்ட முடியாமலும், மற்றொரு புறம் வெட்டிய வாழைத் தார்களை குறித்த நேரத்தில் பிற இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமலும் வாழை பழுத்து உரிய விலை கிடைக்காமலும் நஷ்டமடைந்து விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட பெரியசாமி குடும்பத்துக்கும், விலை வீழ்ச்சியால் பாதிக்கப் பட்ட ஏனைய வாழை விவசாயி களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

உரிய நடவடிக்கை

இதுதொடர்பாக தோட்டக்கலை மற்றும் வேளாண் வட்டாரங்களில் கேட்டபோது, “நேந்திரனுக்கு கேரளத்தில் நல்ல விலை கிடைத்து வரும் நிலையில் ஊரடங்கு காரணமாக அங்கு வாகனங்களில் ஏற்றி அனுப்புவதில் இடையூறு ஏற்பட்டதையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறாத வகையிலும், வாழை விவசாயிகள் பாதிக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்தநிலையில், மேல குழு மணியில் விவசாயி தற்கொலை செய்துகொண்டது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்றனர்.

தடை விதிக்கக் கூடாது

இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மை யினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, “விவசாயிகளின் நிலத்திலிருந்து வாழைத்தார்களை ஏற்றி வருவதற்கு செல்லும் வாகனங்களுக்கும், வாழைத்தார் வெட்டி எடுத்துச் செல்லும் பணிக்காக தொழிலாளர்கள் செல்லும் வாகனங்களுக்கும், வேளாண் விளைபொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்க ளுக்கும் காவல் துறையினர் தடை விதிக்கக் கூடாது” என்றார்.

முன்னதாக அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சத்தை, கரோனா தடுப்பு நிவாரண நிதிக்காக ஆட்சியர் சு.சிவராசுவிடம் அளித்தனர்.

SCROLL FOR NEXT