தமிழகம்

கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை அகற்றுவது குறித்து 3 வார காலத்தில் முடிவெடுக்க வேண்டும்: நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி யில் டாஸ்மாக் கடை அகற்றப்படு வது தொடர்பாக மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சகோதரர் அளித்த மனுவை பரிசீலித்து 3 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலிங்கப்பட்டியில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையை (எண்: 10862) மூட உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சகோதரரும், கலிங்கப் பட்டி ஊராட்சித் தலைவருமான வி.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நலன் மனு தாக்கல் செய்தார்.

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்தபோது, டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் கடை திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடையால் கலிங்கப்பட்டி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடையை மூடுமாறு நெல்லை ஆட்சியர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆகியோருக்கு மனு அனுப்பினோம்.

கலிங்கப்பட்டி ஊராட்சியில் 4.8.2015-ல் டாஸ்மாக் கடையை மூடக் கோரி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் கடையை மூடாமல் நடத்தி வருகின்றனர். எனவே, கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். கடையை மூடவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், வழக்கறிஞர் சுப்பாராஜ் ஆகியோர் வாதிடும்போது, டாஸ்மாக் கடையை மூடுமாறு கலிங்கப்பட்டி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட வேண்டும் என்றார். கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.செல்லப்பாண்டியன், டாஸ்மாக் வழக்கறிஞர் முனியசாமி வாதிடும் போது, டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

3 வார கால அவகாசம்

இதையடுத்து, டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட முடியாது. அது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

கடையை இடமாற்றம் செய்யவே கூற முடியும். கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை தொடர்பாக மனுதாரர் விடுத்துள்ள கோரிக்கையில் நியாயம் இருக்கும் பட்சத்தில், அவரது மனுவை பரிசீலித்து 3 வாரத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT