தமிழகம்

கரோனா வைரஸ் பாதிப்பு: சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்புக்காக, தமிழக அரசுக்கு சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. இதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும், அவற்றுக்கு உதவும் வகையில் முதல்வர் பழனிசாமி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பலரும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள். தற்போது முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமான சக்தி மசாலா 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் சக்தி மசாலா நிறுவனம் கூறியிருப்பதாவது:

"தங்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தாங்கள் எடுத்து வரும் சீரிய முயற்சிகளுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பாக முதற்கண் எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு எங்கள் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் அனுப்பியுள்ளோம் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் நாங்களும் பங்கேற்க தாங்கள் வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி".

இவ்வாறு சக்தி மசாலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT