தமிழகம்

கரோனா பாதிப்பு எதிரொலி: மதுரை அண்ணாநகர் பகுதியில் வங்கிகள் மூடல்

என்.சன்னாசி

மதுரை அண்ணாநகரில் கரோனா பாதிப்பில் ஒருவர் மரணம் அடைந்ததால் அப்பகுதியிலுள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.

மதுரையில் கரோனா வைரஸ் பாதித்து, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்ததையொட்டி அப்பகுதியிலுள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், அத்தியாவசியத் தேவை என்ற அடிப்படையில் மதுரையில் பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்படுகின்றன.

இதற்கிடையில் அண்ணாநகர் பகுதியில் 54 வயதான ஒருவர், கரோனா வைரஸ் பாதித்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையொட்டி அவரது வசித்த பகுதி உட்பட 3 தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. பிற பகுதியினரை உள்ளே செல்லவிடாமல் போலீஸார் கண்காணிக்கின்றனர். உயிரிழந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள், அவர்களுடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இருப்பினும், அண்ணாநகர் பகுதியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மேலும் அடையாளம் காண முடியாமல் இருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

இதற்காக அண்ணாநகர் மற்றும் அதையொட்டிய சுமார் 2 கி.மீ., தூரத்தில் செயல்பட்ட தனியார், தேசிய வங்கிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாக உத்தர வின்பேரில் மூடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையால் அத்தியாவசியத் தேவைக்கென வங்கிகளை அப்பகுதியினர் நாடுவதும் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏடிஎம் மையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இங்கு கிருமிநாசினி உள்ளிட்ட தடுப்புச் சாதனங்களை வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT