மதுரை நகரில் தேவையில்லாத போக்குவரத்துக்களை தடுக்க, அனைத்து பாலங்களும் மூடி, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இடையூறாகத் தேவையின்றி மக்கள் வெளியில் வருவதைத் தடுக்க, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவசியமின்றி வெளியில் சுற்றும் நபர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் தேவைக்கென நகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீ்ட்டில் இருந்தபடி அத்தியாவசியப் பொருட்களை மக்கள் பெற தகுந்த ஏற்பாடுகளை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்துள்ளார்.
இந்நிலையில் காய்கறி மார்க்கெட், இறைச்சி, மீன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க, நகரில் 11 இடங்களில் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கவும், 100 வார்டுகளிலும் குறிப்பிட்ட ஓரிடத்தில் நடமாடும் காய்கறி கடைகளும் செயல்பட மாநகராட்சி ஆணையர் விசாகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது போன்ற நடவடிக்கையால் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களுக்கென மக்கள் அலையவேண்டியதில்லை. இதனால் தேவையின்றி மக்கள் வாகனங்களில் வெளியில் வருவதை தடுக்க, அனைத்து தரை மற்றும் மேம்பாலங்களை மூட காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
விரகனூர், தெப்பக்குளம், குருவிக்காரன் சாலை, ஓபுளாபடித்துறை, யானைக்கல் தரைப் பாலம், யானைக்கல், செல்லூர், ஆரப்பாளையம், காமராஜர் மேம்பாலங்கள் என, 8 பாலங்கள் நேற்று நள்ளிரவு முதல் தடுப்பு வேலிகள்,கயிறு கட்டி அடைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் போக்குவரத்துக்காக ஏவி மேம்பாலம் மட்டும் வழக்கம்போல் செயல் படும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என, மதுரை நகர் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.