போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் மருத்துவ ஊழியர்கள் குரல் கொடுப்பதை அரசு கேட்க வேண்டும். போருக்கு ஆயுதம் இல்லாமல் வீரர்களை அனுப்புவதா? என கமல் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக பொது சுகாதாரத்துறையும் மற்ற துறைகளும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அரசின் செயல்பாடுகளில் சில குறைகள் இருந்தாலும் நிறைகளே அதிகம் எனப் பலரும் பாராட்டுகின்றனர். தமிழக முதல்வர் 11 சிறப்புக் குழுக்களை அமைத்து நோய்த்தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நோய்த் தொற்று கண்டறியப்பட்ட 11 மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அவர்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றிலும் உள்ள 2,500 வீடுகளைக் கணக்கெடுத்து ஆய்வு செய்யும் பணியை 28 நாட்களுக்குச் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்து நேற்று முதல் பணியைத் தொடங்கியது.
தனது வீட்டை மருத்துவமனையாக்க அரசின் அனுமதியை ஆரம்பத்திலேயே கமல் கேட்டார். “இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்குப் பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களைக் கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதைச் செய்யத் தயாராக காத்திருக்கிறேன்” என்றார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் பாராட்டிப் பதிவிடுகிறார்.
அவரது முந்தைய பதிவு:
“மனித இனத்திற்கு எதிரான இந்த கரோனா தாக்குதலுக்கு எதிராக இரவு, பகல் பாராமல் அயராது போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தனக்கென பாராமல் பிறர்க்காக போராடும் உங்களின் சேவையால்தான் உலகம் பயமின்றி சுவாசிக்கிறது”.
அதே நேரம் அமைச்சர் விஜயபாஸ்கரை டேக் செய்து சில நாட்களுக்கு முன் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், “வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது”. எனக் குறிப்பிட்டு செய்யும் பணிகள் போதாது என மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள், சோதனை செய்யும் கிட்கள், உடைகள் பற்றாக்குறை உள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து அதைக் குறிப்பிட்டு இன்று ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை கமல் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்குச் செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்தக் கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்”.
இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.