கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்க பாம்பனில் இயங்கும் கடல் ஓசை சமுதாய வானொலி 24 மணி நேரமும் இடைவிடாது இயங்கி வருகிறது.
அகில இந்திய வானொலியின் வரலாற்றில் முதன் முறையாக காலை மதியம், இரவு உட்பட மூன்று வேளை தமிழ் தேசிய செய்தி அறிக்கைகள் கரோனா பாதிப்பால் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
அது போல அகில இந்திய வானொலியின் அனைத்து வெளிநாட்டு சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமேசுவரம் அருகே பாம்பனில் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பில் உலகிலேயே முதன்முறையாக மீனவர்களுக்கான பிரத்யேக துவங்கப்பட்ட சமுதாய வானொலி நிலையம் 24 மணி நேரமும் இயங்குகிறது.
கடல் ஓசை 90.4 என்ற அந்த வானொலி, கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்க 24 மணி நேரமும் இடைவிடாது இயங்கி வருகிறது.
இது குறித்து கடல் ஓசை வானொலியின் நிறுவனர் எஸ். ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது,
கடந்த மார்ச் 27 அன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள முக்கியமான வானொலி ஒலிபரப்பாளர்களுடன் கலந்துரையாடலில் நடத்தினார்.
இதில் கரோனா குறித்த நிபுணர்கள் கருத்துக்கள், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆகியவைகள் பற்றிய செய்திகளை ஒலிபரப்புவதுடன் நின்றுவிடாமல், கரோனாவால் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள், சவால்கள் குறித்த கருத்துக்களை அரசுக்கு தெரிவித்தால், அரசு தாமாகவே முன்வந்து அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும் காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போன்ற உள்ளூர் கதாநாயகர்களின் பங்களிப்பை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து 24 மணி நேரமும் கடல் ஓசை சமுதாய வானொலி இடைவிடாது இயங்கி வருகிறது.
கரோனா வைரஸ் எப்படிப் பரவுகிறது? யார் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுடன் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான கைகளைக் கழுவ வலியுறுத்துவது, முகக் கவசம் அணியச் சொல்வது, சமூக விலகலை தவிர்த்திட வேண்டும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
குழந்தைகள், பெரியோர்களை எவ்வாறு பாதுகாக்கலாம் குறித்து மருத்துவர்களின் ஆலோசனைகளும் வானொலி மூலம் வழங்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் அறிவுரைகளை வானொலி மூலம் கிடைக்கும் என்பதால் பொது மக்களுக்கு கரோனா பரவல் நேரங்களில் வானொலிகளின் பயன் இன்றியமையாதது. இதன் மூலம் அதிகாரப்பூர்வமற்ற வதந்திகள் தவிர்க்கப்டுகிறது, என்றார்.
எஸ். முஹம்மது ராஃபி