தமிழகம்

கரோனா தடுப்புப் பணிகளுக்காக கனிமொழி எம்.பி. ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

ரெ.ஜாய்சன்

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான தற்காப்புக் கருவிகள் வாங்குதல், கரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும், மேற்கண்ட பணிகளுக்கு நிதியை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக எம்.பி. நிதியிலிருந்து முதன் முதலாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நிதி ஒதுக்கினார். பின்னர் விசிக எம்.பி. திருமாவளவன் நிதி ஒதுக்கினார். தற்போது திமுக எம்.பி. கனிமொழி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளார்.

கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பை சமாளிக்க உதவிடும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று வெள்ளிக்கிழமை தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT