தமிழகம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண தொகையை ஊரடங்கு முடிந்த பிறகு வழங்கலாம்: தமிழக முதல்வருக்கு ரேசன் கடை பணியாளர்கள் கடிதம்

கி.மகாராஜன்

‘கரோனா பரவ அதிக வாய்ப்பிருப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கரோனா நிவாரண தொகை ரூ.ஆயிரத்தை ஊரடங்கு முடிந்த பிறகு அல்லது கரோனா கிருமி கட்டுப்படுத்தப்பட்ட பிறகு வழங்கலாம்’ என தமிழக முதல்வருக்கு ரேசன்கடை பணியாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தின் கவுரவ பொதுச் செயலர் செ.குப்புசாமி, பொதுச்செயலர் பி.காமராஜ்பாண்டியன், மதுரை மாவட்ட செயலர் ஆ.ம.ஆசிரியதேவன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா கிருமி தெற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், கிருமி பிறருக்கு பரவாமல் தடுக்கவும் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் ரூபாயை வாங்க குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் கடைக்கு மொத்தமாகவே வருவர். இதனால் கரோனா தொற்றால் பொதுமக்களும், ரேசன் கடை பணியாளர்களும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

எனவே ரேசன் பணியாளர்களையும், பொதுமக்களையும் கரோனா பதிப்பிலிருந்து பாதுகாக்க குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு அல்லது கரோனா கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகே அமல்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 60 ஆயிரம் ரேசன் கடை பணியாளர்களை காப்பாற்ற வேண்டும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு அரசின் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை முறையாக நிறைவேற்றி அரசுக்கு நற்பெயர் பெற்றுத்தருவோம் என உறுதியளிக்கிறோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT