கரோனா பாதிப்பு பற்றி பேச அனுமதிக்காததால் புதுச்சேரி சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்ட பிறகும் அவையின் உள்ளே சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 30) இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. அப்போது, கரோனா பாதிப்பு தொடர்பாக பேச அனுமதிக்காததால், அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து, அவர்கள் சட்டப்பேரவைக்குள் வந்து சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, பாஜக நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் தர்ணாவில் இணைந்தனர்.
தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபடும்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிந்து ஒத்தி வைக்கப்பட்டன. எனினும், தொடர்ந்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையின் உள்ளே சபாநாயகர் இருக்கை முன்பு தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.