தமிழகம்

கரோனா தொற்று எதிரொலி: ராஜபாளையத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு; வீடுவீடாக கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது

இ.மணிகண்டன்

ராஜபாளையத்தைச் சேர்ந்த முதியவ்ருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் வசித்த பகுதியிலிருந்து 7. கி.மீ சுற்றளவில் 6 தீயனைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி மருந்து சாலைகளில் தெளித்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிழக்கு பகுதியில் வசித்து வந்த 60 வயது முதியவருக்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் கரோனா தொற்று உறுதியானது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மற்றும் 7 கி.மீ சுற்றளவில் சிவப்பு மண்டலமாக அறிவித்து பல்வேறு தடுப்பு தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை ராஜபாளையம் நகராட்சி எடுத்து வருகிறது.

மேலும் சாலைகளைத் தூய்மை படுத்துவதற்காக தீயனைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் முத்துபாண்டியன் மற்றும் ராஜபாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயராம் அவர்கள் தலைமையில் பணிகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம்,சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ஆகிய பகுதியில் இருந்து வந்திருந்த 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 7 கி.மீ சாலைகள், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இரவு முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்து தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கணக்கெடுப்பும் நடைபெறுகிறது..

தொடர்ந்து இன்று காலை முதல் , கரோனா சமூகப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதி மக்களை சந்தித்து கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நகராட்சியிலிருந்து டிபிசி தொழிலாளர்கள், மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் என 220 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களை சந்தித்து ஏதேனும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா? வெளி மாநிலம், வெளிநாடு சென்று திரும்பியவர்கள் யாரேனும் உள்ளனரா? என கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 5 கி.மீ சுற்றளவில் 21 வார்டு மக்களை சந்தித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவதாக சுகாதார துறை நகர் நல அலுவலர் சரோஜா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT