உணவு பொருட்கள், மருந்துகள் ஆகியவை நியாயமான விலையில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 30) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மக்கள் கரோனா வைரஸ் நோய் தடுப்புக்காகவும், நோயின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடுவதற்காகவும் மத்திய, மாநில அரசுகளின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டிய அவசிய, கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலின் 2 ஆம் கட்டத்தில் நாம் இருக்கிறோம். இது நீடித்து 3 ஆம் கட்டத்துக்கு சென்றால் ஆபத்தான கட்டத்துக்கு தள்ளப்படுவோம். எனவே, கரோனாவை ஒழித்து, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் வீட்டிலேயே இருந்து, சுத்தம் சுகாதாரத்தைப் பேணி காத்து, அவசர, அவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் சென்று வந்து, அரசின் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
தமிழக மக்கள் எக்காரணத்திற்காகவும் கரோனா தடுப்பில் கவனக்குறைவாக செயல்படக் கூடாது. நமக்காகவும், நம்மை சுற்றியுள்ள குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்காகவும் நாமெல்லாம் கரோனா ஒழிப்புக்காக நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்து செயல்பட வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பரவாமல் தடுக்கப்படுவதோடு, நோயின் காரணமாக ஏற்படும் பாதிப்பிலிருந்தும் தமிழக மக்களை காப்பாற்றிவிடலாம்.
தற்போதைய சூழலில் கடைகளில் விற்கப்படும் உணவுப்பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட எதனையும் கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என்பதை கடையின் உரிமையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். காரணம் இன்றையச் சூழலில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனை அரசு தொடர்ந்து கண்காணித்து மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியுமானால் உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
தமிழகத்தில் கரோனா பரவாமல் இருக்க, நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நோயிலிருந்து காப்பாற்ற, நோயினால் இனிமேல் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகள் பலன் தர வேண்டும் என்றால் அனைத்து தரப்பினரும் கரோனாவின் பரவல் உயிரை பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மேலும், தமிழகத்தில் வணிகர் சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகள் இப்போதைய அசாதாரண சூழலில் விடுக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும்" என வாசன் வலியுறுத்தியுள்ளார்.