ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் விவசாயிகளின் விளைபொருட்களை பிற இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் மன உளைச்சலில் விவசாயி ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகேயுள்ள கீழ குழுமணி மேலத்தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (65). இவர், அப்பகுதியில் கடந்தாண்டு சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பெற்று நேந்திரன் உள்ளிட்ட வாழை ரகங்களை பயிரிட்டு, கடனாக பெற்ற பணத்தில் இடுபொருட்கள், உரங்களை வாங்கி பயன்படுத்தி பராமரித்து வந்தார்.
இந்நிலையில் நேந்திரன் வாழைகள் நல்ல விளைச்சலை எட்டின. ஆனால் கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்குச் சட்டம் அமலில் இருப்பதால், வாழைத்தார்களை வெட்டி கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்புவதில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். வெளியூர் வியாபாரிகள் வாங்க மறுப்பதால், வழக்கமாக ரூ.35-க்கு விற்பனையாக வேண்டிய ஒரு கிலோ வாழைக்காய் ரூ.10-க்கு மட்டுமே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் வாழைக் காய்களை விற்பனை செய்யும் பணத்தில், வாங்கிய கடனைக்கூட அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமே என பெரியசாமி தனது குடும்பத்தினரிடம் புலம்பி வந்துள்ளார். மேலும், பிஞ்சு பிடிக்கும் நிலையிலுள்ள வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கான டீசல் வாங்குவதற்கும் அவரிடம் பணமில்லாத சூழல் ஏற்பட்டது. இவற்றால் மனமுடைந்த பெரியசாமி கடந்த 25-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மக்களவைத் தொகுதி சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாழை விவசாயி பெரியசாமியின் தற்கொலை செய்து மிகவும் மன வருத்தத்தை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியசாமியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலை இதுபோல் தொடராத வகையில் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விவசாயி பெரியசாமியின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு தர வேண்டும். வேளாண் விளை பொருட்களை வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் கொண்டு செல்வதில் பல நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதால், வேளாண் விற்பனைக் குழுக்கள் மூலம் கட்டுபடியாகக் கூடிய விலையில் விளைபொருட்களை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியசாமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை நிகழாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.