குமரி மாவட்டத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்ய விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் பிரசாந் மு வடநேரே தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா கண்காணிப்பு வார்டில் 7 நபர்கள் உயிர் இழந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு வடநேரே மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது.
குமரிமாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர நோய் தொற்று வார்ட், கண்காணிப்பு (ஐசோலாஷன்) வார்ட், கண்காணிப்பு அறை என மூன்று பிரிவுகள் உள்ளன.
இந்த வார்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கரோனா வைரஸ் உள்ளதா என சந்தேகம் இருக்கும் நபர்களையும், பல்வேறு வியாதிகளில் பாதிக்கப்பட்ட நபர்களையும் அனுமதித்து கண்காணித்து மருத்துவ சிகிட்சை அளிக்கப்படுகிறது.
எனவே இதனை கருணா நோய் பாதிப்பு என்று யாரும் குறிப்பிட வேண்டாம்.
இந்த நிலையில் இந்த வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வேறு சில நோய்களால் உயிர் இழப்பு ஏற்பட்டபோது சமூக வலைதளங்களில் கரோனா வார்ட்டில் இருந்த நோயாளிகள் இறந்ததாக செய்தி பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனால் இது உண்மையில்லை.
குமரி மாவட்டத்தில் கரோனா வைரசால் இதுவரை யாரும் உயிர் இழக்கவில்லை. இதுபோல் குமரியில் 4446 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் சுகாதார துறை மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். யாரேனும் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் அரசிற்கு தெரிவிக்க வேண்டும்.
குமரி மாவட்ட மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகிறார்கள். குமரி மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 109 வெண்டிலேட்டர்கள் உள்ளன.
மாவட்டத்தில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.