ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் எந்தவித சமூக இடைவெளி, முகக்கவசம் என உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் தொற்று பரவும் அச்சத்தில் ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் உள்ளனர்.
மேலும் கேரளாவிற்கு காய்கறி லாரிகள் தடையை மீறி சென்றுவருவதால் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து மூடப்பட்டது.
இதனால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் மார்க்கெட் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் கேரளாவிற்கு தான் அதிகமான காய்கறிகள் இங்கிருந்து செல்கிறது எனவே காய்கறிகளை கேரளாவிற்கு கொண்டுசெல்ல அனுமதித்தால் மட்டுமே காய்கறி மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கு கட்டுப்பாடுகளை விதித்து உரிய நடைமுறைகளுடன் மார்க்கெட் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் கேரளாவிற்கு காய்கறிகளை அனுப்ப முதலில் சம்மதித்த மாவட்ட நிர்வாகம் பின்னர் பின்வாங்கியது. தமிழகத்திற்குள் பிற மாவட்டங்களுக்கு மட்டுமே காய்கறிகளை அனுப்பவேண்டும் என்றது.
இந்நிலையில் இன்று காலை மார்க்கெட் செயல்படத் தொடங்கியது. வழக்கம்போல் நூற்றுக்கணக்கானோர் கூடினர். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. முகக்கசவம் யாரும் அணியவில்லை.
கிராமப்புறங்களில் இருந்து வந்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு இல்லாததால் வழக்கமாக கூட்டமாக காணப்பட்டனர். வியாபாரிகளும் கட்டுபாடு இன்றி கூட்டத்தில் சென்றுவந்தனர். நூற்றுக்கணக்கானோர் அரசின் எந்தவித கட்டுப்பாடும் இன்றி நடந்துகொண்டனர்.
காய்கறிகளை லாரிகளில் ஏற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கைசுத்தம், முகக்கவசம் இன்றி செயல்பட்டனர்.
இத்தனை பேரும் கூடும் இடத்தில் நகராட்சி நிர்வாகம் கரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கூட நடத்தவில்லை.
கேரளவியாபாரிகள் நேற்று வழக்கம்போல் காய்கறிகளை கொள்முதல் செய்தனர். கேரளாவிற்கு வழக்கம்போல் காய்கறி மூடைகள் லாரிகளில் ஏற்றப்பட்டன. மாநிலம் கடந்து செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லையே என கேட்டபோது,
செக்போஸ்ட் செல்லாமல் பல கிராமங்கள் வழியேசென்று கேரளாவிற்குள் நுழைய வழி உள்ளது என்கின்றனர் லாரி ஓட்டுனர்கள். சிலர் வழியில் தடுத்தபோதும் அத்தியாவசிய பொருட்கள் என கூறி கேரளாவிற்கு லாரிகள் சென்றுவந்ததாகவும் கூறுகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்:
குடியிருப்பு நிறைந்த பகுதியில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு கூடும் கூட்டம் கரோனா வைரஸ் பரவுவதற்கு ஏற்றதாக உள்ளது. சிறிய பெட்டிக்கடைகளைக் கூட திறக்கவிடாமல் தடுக்கும் மாவட்ட நிர்வாகம். இதுபோன்ற பெரிய சந்தையை திறக்க அனுமதித்தது எப்படி.
இதிலும் கேரளாவிற்கு லாரிகள் சென்றுவந்தால், அங்கு கரோனா பாதிப்பு அதிகம் உள்ளநிலையில் பரவுவதற்கு எளியவகையை மாவட்ட நிர்வாகமே ஏற்படுத்தித்தருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது என்கின்றனர் ஒட்டன்சத்திரம் பகுதி பொதுமக்கள்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் கேரளா செல்ல காய்கறி வாகனங்களுக்கு தடைவிதித்தபோதும் தடையைமீறி குறுக்குவழிகளில் லாரிகள் செல்கிறது என்கின்றனர் மார்க்கெட்டில் உள்ள சில வியாபாரிகள்.
இதை அதிகாரிகள் கண்காணித்து தடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதால் கரோனா வைரஸ் பாதிப்பை வழிய வந்து தாமே மாவட்டத்திற்குள் கொண்டுவருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்கின்றனர்.