கரோனா வைரஸ் எதிரொலியால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் தையல் கலைஞர்கள் வருவாய் ஈட்டும் வகையில் அவர்களை முகக் கவசம் தயாரிக்கத் தயார்படுத்தி, அவற்றை கொள்முதல்செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளர் இந்துமதி.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இந்துமதி என்பவர், அப்பகுதியில் இயங்கி வரும் 60 மகளிர் சுய உதவிக் குழுவினரை ஒருங்கிணைத்து, கடந்த 8 வருடங்களாக மகளிருக்கான ஆயத்த ஆடைகள், பள்ளி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கான உடைகள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவுதலால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில், தளர்ந்துவிடாமல், தற்போதைய சமூகத் தேவையைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் தயாரிப்பில் முழு மூச்சாக இறங்கியுள்ளார். மேலும் ஒரே இடத்தில் அனைவரும் சேர்ந்து பணியாற்ற முடியாத சூழல் என்பதால், சுய உதவிக் குழுவைச் சேர்ந்த தையல் கலைஞர்களை வீட்டிலிருந்த படிய முகக் கவசத் தயாரிப்பில் ஈடுபடுத்தியுள்ளார்.
இதுதவிர வீட்டில் முடங்கிக் கிடக்கும் தையல் கலைஞர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அழைப்பு விடுத்து அவர்கள் மூலமும் முகக் கவசம் தயாரிக்க தயார்படுத்தி அவர்களிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனையில் ஈடுபட்டுள்ளதோடு, மருத்துவமனைகளுக்கு விநியோகித்து வருகிறார். இதுதவிர மருத்துவர்கள் அணியும் பாதுகாப்புக் கவச ஆடையையும் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இது தொடர்பாக இந்துமதியிடம் கேட்டபோது, ''மகளிர் சுய உதவிக் குழுவினரைக் கொண்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து வருவதோடு, ஆயத்த ஆடைகள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்த நிலையில், கரோனா தாக்கம் காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கான முகக் கவசத் தேவையும் அத்தியாவசியமாகிப் போனதால், அவற்றில் ஈடுபட முடிவு செய்தோம். அதற்கேற்ற வகையில், குழு உறுப்பினர்கள் வீட்டில் இருந்தபடியே முகக் கவசம் தயாரிக்க வலியுறுத்தினோம். நல்ல பலன் கிட்டியது.
மருத்துவர்கள் எங்களிடம் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். கடந்த 10 தினங்களில் 1 லட்சம் முகக் கவசம் வரை தயாரித்து விநியோகித்துள்ளோம். வீட்டிலிருந்தபடி தயாரிக்க முன்வருவோருக்கு மூலப் பொருள்களை வழங்கி, தையல் கூலி மட்டும் கொடுத்து வருகிறோம். வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு இது வருமானத்திற்கு வழிவகுக்கும்.
எங்களது முகக் கவசத் தயாரிப்பைப் பாராட்டிய மருத்துவர்கள், மருத்துவர்கள் அணியும் பாதுகாப்புக் கவச ஆடைகள் தயாரிக்க முடியுமா எனக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தற்போது அதையும் தயாரித்து வழங்கி வருகிறோம்'' என்றார்.