சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தங்கியிருந்த மலேசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்தார்.
மலேசியாவைச் சேர்ந்த 7 பேர், இந்தோனேசியாவைச் 4 நபர் என 11பேர் கடந்த பிப்ரவரியில் டெல்லி வந்துள்ளனர். ஒரு மாதம் அங்கேயே தங்கியிருந்த அவர்கள், மார்ச் 19-ம் தேதி திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வந்துள்ளனர்.
பின்பு அங்கிருந்து ரயில் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில் நிலையக்கு மார்ச் 21-ம் தேதி வந்தனர்.
அங்கிருந்து இளையான்குடியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வந்தனர். கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய நிலையில் வெளிநாட்டினர் 11 பேரும் அங்குள்ள தனியார் பண்ணை வீட்டில் தங்கி இருந்தனர்.
அவர்களை மருத்துவ குழுவினர் பரிசோதித்தபோது மலேசியாவைச் சேர்ந்த ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் காரைக்குடி அமராவதி புதூர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று அம்மருத்துவமனையை ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெளிநாட்டினருக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இல்லை. இருந்தபோதிலும் அவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் காய்கறிகளை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கொண்டு வர பஸ் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
நெருக்கடியாக இருந்த சந்தைகளும் பேருந்துநிலையம, மைதானம் போன்ற விரிவான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன, என்று கூறினார்.