கொடைக்கானல் மலைகிராமங்கள் வழியாக கேரளாவைச் சேர்ந்த சிலர் தமிழகத்திற்குள் ஊடுவிவருகின்றனர். இவர்களை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மலைகிராம மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதி கிராமங்கள் கேரள மாநில எல்லையில் உள்ளது. கொடைக்கானலில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்ல திண்டுக்கல் மாவட்டம் கிளாவரை வழியாக சாலை வசதி இருந்தது. இது பின்னர் மூடப்பட்டது.
தற்போது தமிழக கேரள எல்லைகளை ஒட்டியுள்ள மலைகிராமங்கள் வழியாக கேரளாவை சேர்ந்த சிலர் தமிழகப் பகுதிக்குள் ஊடுருவிவருகின்றனர். இதனால் கேரளாவில் உள்ள கரோனா வைரஸ் தாக்கம் தமிழகப்பகுதியில் உள்ள கொடைக்கானல் மலைகிராம மக்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் காசர்கோடு பகுதியில் கரோனை வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அபிஜித், அக்சய் ஆகியோர் கொடைக்கானல் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.
கொடைக்கானல் அருகேயுள்ள கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்த இருவர் கேரளாவில் இருந்து வனப்பகுதிகள் வழியாக நடந்தே கவுஞ்சி கிராமத்திற்கு வந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரில் மன்னவனூர் ஆரம்பசுகாதாரநிலைய மருத்துவர்கள் நால்வரயும் அழைத்துவந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆரம்பகட்ட சோதனைகள் நடத்தி தனிமைப்படுத்தியுள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் இருந்து 10 கிலோ மீட்டர் நடந்து சென்றால் கேரள மாநிலஎல்லை உள்ளது.
எனவே கேரள மாநிலத்தில் இருந்து வனப்பகுதி வழியாக எளிதில் தமிழக மலைகிராமத்திற்குள் நுழைந்துவிடமுடியும்.
இதைத்தடுக்க வனத்துறையினர் மாநில எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும். இதனால் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கலாம் என மலைகிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.