தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தில் ஊருக்குள் வரும் எல்லையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தண்ணீர் தொட்டி அமைத்து சோப் வைத்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக ஊருக்குள் வரும் அனைவரும் தங்கள் கை, கால்களை கழுவிவிட்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், கரோனா தடுபுக்காக குருசாமிபுர இளைஞர்களின் முயற்சி பாராட்டைப் பெற்றுவருகிறது.
இதேபோல், சுரண்டை அருகே உள்ள தன்னூத்து கிராமத்துக்குள் வரும் வழியில் அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் தடுப்பு அமைத்துள்ளனர். மேலும், அருகில் தண்ணீர், சோப் வைத்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியாட்கள் யாரும் ஊருக்குள் வர வேண்டாம் என்றும், தன்னூத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியூர் சென்றுவிட்டு வரும்போது கை, கால்களை கழுவிவிட்டு வர வேண்டும் என்றும் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
நகர்ப்புறங்களில்கூட மக்கள் விழிப்புணர்வின்றி இருக்கும் நிலையில், கிராம மக்கள் தங்களை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்படுவது பாராட்டை பெற்றுள்ளது.