கரோனா அச்சுறுத்தலால் வெளியூர் ஆட்கள் கிராமத்துக்கு வரத் தடை விதித்து முள்வேலியைக் கட்டியுள்ளனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் அத்தியாவசியப் பொருட்கள் செல்லும் வாகனத்தை மட்டும் அனுமதிக்கின்றனர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க, புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, புதுச்சேரியை அடுத்த மணலி பட்டு கிராமத்தில் தினந்தோறும் வெளியூர் நபர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வந்து செல்கின்றனர். இதனால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
யாரும் நடைபாதையாகவும், வாகனங்களில் மூலமும் கிராமத்தினுள் உள்ளே வரக்கூடாது என்பதற்காகவும் தங்களாகவே, கிராம எல்லைப்பகுதியில் சாலையின் குறுக்கே கயிறு கட்டியும், முட்செடிகளைக் கொண்டும் தடுப்புகளை ஏற்படுத்தினர்.
இதுகுறித்து இக்கிராமத்தினர் கூறுகையில், "மணலிப்பட்டு கிராம சாலை வழியாகதான் திருக்கனூர் பஜார் வீதிக்கு தமிழக மக்கள் செல்ல முடியும். கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னும் தமிழக மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி மணலிப்பட்டு கிராமம் வழியாக பைக்கில் சென்று வந்தனர். இது கிராம மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தியது.
இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து கிராம எல்லையான ஐவேலி, கோரைக்கேணி, கூனிச்சம்பட்டு பகுதி சாலைகளின் நடுவே தடுப்புகளை ஏற்படுத்தி சுய ஊரடங்கை ஏற்படுத்தினோம்" என்றனர்.
இதனால் அப்பகுதியில் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழக மக்கள் மாவட்ட வருவாய்த்துறைக்குப் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழகப் பகுதிக்கு அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் கிராம மக்களிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று காய்கறி, மளிகை, மருந்து உள்ளிட்ட வாகனங்களை மட்டும் அவ்வழியே செல்ல கிராம மக்கள் அனுமதித்துள்ளனர்.