சுய உதவிக்குழுக்களைக் கொண்டு பக்கவிளைவு இல்லாத கிருமி நாசினியைத் தயாரித்து புதுச்சேரி அரசு குறைந்த விலையாக 200 மி.லி. பாட்டில் ரூ.80க்கு விற்பனை செய்கிறது.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க கிருமி நாசினியை (சானிடைசர்) கொண்டு அடிக்கடி கை கழுவ வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் கிருமிநாசினியைப் பலரும் வாங்கிச் செல்வதால், தட்டுப்பாடு ஏற்பட்டு பற்றாக்குறை காரணமாக விலையும் உயர்ந்துள்ளது. தற்போது 100 மி.லி. விலையை ரூ.100க்கு மேல் விற்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசு குறைந்த விலையில் கிருமி நாசினியை உழவர்கரை நகராட்சி மூலம் தயாரித்து வருகிறது. இதற்கு அரசுக் கல்லூரிகளும் உதவுகின்றன.
இது தொடர்பாக காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் வேதியியல் பேராசிரியர் ராஜமதி கூறுகையில், ''கல்லூரி அறிவியல் கூடத்தில் பேராசிரியர்களின் உதவியுடன் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. பக்கவிளைவு இல்லாத வகையில் புதுவிதமாக கிராம்பு எண்ணைக் கொண்டு கிருமிநாசினியைத் தயாரிக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
உழவர்கரை நகராட்சி திட்ட அதிகாரி சரவணன் கூறுகையில், "கல்லூரிப் பேராசிரியர் உதவியுடன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குப் பயிற்சி தந்துள்ளோம். எங்கள் நகராட்சிக்கு உட்பட்ட சுய உதவிக்குழு பெண்கள் கொண்டு தற்போது கிருமி நாசினி தயாதித்து குறைந்த விலையில் விற்கிறோம்" என்றார்.
நகராட்சி ஆணையர் கந்தசாமி கூறுகையில், "வெளிச்சந்தையை விட இங்கு தயாரிக்கப்படும் கிருமி நாசினி விலை குறைவு. 100 மி.லி. ரூ.40தான் நிர்ணயித்துள்ளோம். தற்போது 200 மி.லி.பாட்டிலை ரூ.80க்கு விற்கிறோம்" என்றார்.
வெளிச்சந்தையில் தற்போது சானிடைசர் விலை அதிக அளவில் உள்ள சூழலில் அரசு தயாரித்து விற்கும் சானிடைசருக்கு வரவேற்பு உள்ளது. அது மக்களுக்கு கிடைக்கும் வகையில் நகராட்சி ஏற்பாடு செய்வது அவசியம் என்று பொதுமக்கள் கோருகின்றனர்.