கர்நாடக மாநிலத்துக்கு மீன்பிடி கூலிகளாகச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கர்நாடக எல்லையில் உள்ள சத்தியமங்கலம் சோதனைச் சாவடியில் தவித்து வந்தனர்.
இவர்களில் 167 பேர் மார்ச் 26-ம் தேதி ராமநாதபுரம் திரும்பினர். இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் மீனவர்கள் அனைவரும் முதுகுளத்தூரில் உள்ள அரசு கல்லூரி, அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த இடங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனா். இதை அறிந்த அந்தப் பகுதி மக்கள் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையில் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். முதுகுளத்தூர் டி.எஸ்.பி. ராஜேஸ் தலைமையில் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.