தமிழகம்

கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் வீடுகளை சுற்றி 8 கி.மீ சுற்றளவுக்கு வீடுகளில் சோதனை: பொது சுகாதாரத்துறை முடிவு

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீடு உள்ள 5 கி.மீ மற்றும் கூடுதலாக 3 கி.மீ சுற்றளவு இடத்தை முழுதுமாக சல்லடைப்போட்டு பரிசோதிக்கும் வகையில் வீடுதோறும் சென்று கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு கண்டறியும் பணிகளை மேற்கொள்ள 10 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று நோய் (கோவிட் – 19) பாதிப்பு சீனாவைத் தொடர்ந்து உலகில் 198 நாடுகளில் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நோய்தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 2,09,284 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரப்பெற்றோர், அவர்களுடன் தொடர்பில் உள்ளோர் என இதுவரை 43,537 நபர்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 3,319 பயணிகள் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பு நிறைவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் (கோவிட் - 19) தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்குவதற்காக மன நல ஆலோசகர்கள் மாவட்ட தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால உதவி மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று நோய் (கோவிட் - 19) தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளவர்கள் தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அறிவுரைகளும், ஆலோசனைகளும் பெறுவதற்கு கூடுதலாக மன நல ஆலோசகர்கள் தனியாகவும் பணியில் உள்ளனர்.

இன்று (28.03.2020) கொரோனா வைரஸ் தொற்று நோய் (கோவிட் - 19) உறுதி செய்யப்பட்ட நபர்களின் மாவட்டங்கiளைச் (ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, திருநெல்வேலி, மதுரை, அரியலூர், வேலூர், சேலம், செங்கல்பட்டு, திருப்பூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ) சார்ந்த 13 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுடன் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் (CONTAINMENT PLAN) வரையறுக்கப்பட்டது. அதன்படி, நாளை முதல் (29.03.2020) ஒவ்வொரு கொரோனா வைரஸ் தொற்று நோய் (கோவிட்-19) உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளைச் சுற்றிலுமுள்ள 5 கி.மீ. தொலைவு மற்றும் கூடுதலாக 3 கி.மீ. தொலைவு வரை தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 50 வீடுகளுக்கு ஒரு நபர் (கிராம சுகாதார செவிலியர்கள் (VHN) / அங்கன்வாடி பணியாளர்கள் ((AW) / அங்கீகரிக்கப்பட்ட கிராம சமூக பணியாளர்கள் (ASHA) வீடுவீடாகச் சென்று நோய் தொற்று கண்டறியும் பணி மேற்கொள்வர். நான்கு பணியாளர்களுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் பணிகளை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்வார். இக்குழுவினர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள நபர்களை கண்டறிந்து, அந்நபர்கள் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, வயதானவர்களின் விவரங்களையும் சேகரிப்பர்.

மேலும், நோய் தொற்று அதிகமாக ஏற்படக் கூடும் என கருதப்படும் ((Vulnerable Group) பிரிவினர் மீது தனி கவனம் செலுத்தப்படும். இதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர், கர்ப்பிணி தாய்மார்கள், நீரழிவு நோய், இரத்த அழுத்த நோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்படுவர்.

முதல்வர் பொதுமக்கள் கொரோனா நோய் தடுப்பு குறித்த தகவல்களை பெறுவதற்கும் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவும் சாட் போடினை (Chat Bot) (90357 66766) துவக்கி வைத்துள்ளார்கள். ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களின் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அவர்கள் மூலமும் அனுமதி பெறலாம்.
மேலும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் காய்கறி சந்தைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடைகள் குறிப்பிட்டுள்ள சமூக இடைவெளியுடன் (Social Distance ) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நோய் தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஊரகம் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சந்தைகள், பேருந்து நிலையங்கள், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் தீயணைப்புத் துறை வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களை பயன்படுத்தி தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT