கரோனா நிவாரணத்துக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ரவிச்சந்திரன் நிதியுதவி வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 28 ஆண்டுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் கரோனா நிவாரண நிதிக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதி கணக்கில் சிறையில் சம்பாதித்த பணத்தில் ரூ.5 ஆயிரத்தை இன்று வழங்கினார்.
இதுபற்றி ரவிச்சந்திரனின் வழக்கறிஞர் திருமுருகன் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார். மேலும் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளை மக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
அண்மையில் கரோனாவால் சிறையில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் நீண்ட கால பரோலில் விடுவிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு வழக்கறிஞர் தெரிவித்தார்.ரவிச்சந்திரன் ஏற்கெனவே ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ. 20 ஆயிரம், கஜா புயல் நிவாரணத்து ரூ.5 ஆயிரம் வழங்கினார்.