108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊதியத்தை வழங்கிட வேண்டும். மத்திய மாநில அரசுகள், மருத்துவத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக கரோனா பரிசோதனை செய்திட வேண்டும், என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்tஹியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“கரோனா பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கிருமி நீக்கம் செய்யாமலேயே, இதர நோயாளிகளுக்கும் பல்வேறு இடங்களில் பயன்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
* கரோனா பாதிப்புக்கென்று தனியாக 108 ஆம்புலன்ஸ்களை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு நோயாளிக்கும் பயன்படுத்திய பிறகு முழுமையாக கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் 108 ஆம்புலன்ஸ் மூலம் இதர நபர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்தப் பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும்.
*மருத்துவர்கள் மருத்துவக் குழுவினருக்கு தற்காப்புச் சாதனங்கள், உடைகள், (PPEs),ஹேஷ் மேட் சூட் (HazMat Suit) போன்றவற்றை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
* மத்திய அரசு, மருத்துவக் குழுவினருக்கு காப்பீடாக ரூ.50 லட்சம் போடப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்து. ஆனால் இது மட்டும் போதாது.
* காப்பீட்டுத் தொகை மட்டுமின்றி, அரசே நேரடியாக ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 3 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டும். அது இளநிலை, முது நிலை மருத்துவத்துறை மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக வெளிக் கொணர்தல் முறையில் பணிபுரியும் அனைத்து மருத்துவத் துறை ஊழியர்களுக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அமரர் ஊர்தி ஊழியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த இழப்பீட்டை வழங்கிட வேண்டும். உடல்நல ரீதியான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பிற்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
* 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
* மத்திய மாநில அரசுகள், மருத்துவத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக கரோனா பரிசோதனை செய்திட வேண்டும். மீண்டும் கரோனா பரிசோதனையை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவ்வப்பொழுது செய்திட வேண்டும். அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.
* பல்வேறு நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் மிகக் குறைவான நபர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் உண்மையான எண்ணிக்கையை கண்டறிய முடியவில்லை. இது கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. எனவே,பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
* கரோனா வார்டுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்கும் வசதிகளை மருத்துவமனைகளிலேயே ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா பரவுவதைத் தடுக்க முடியும். போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.
* மருத்துவத் துறை பணியார்களுக்கு, கரோனா தடுப்பிற்கு ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்தை கொடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
* காவல்துறையினர் அத்துமீறி மருத்துவர்களை தாக்குவது கண்டனத்திற்குரியது. பணிக்குச் செல்லும் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும். போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
* எம்ஆர்பி தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு உள்ளாகி, உடனடியாக வேலைக்குச் செல்லக் காத்திருக்கும் செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கு வேலை வழங்கிய பிறகே பிறருக்கு வேலை வழங்கிட வேண்டும்.
* எம்பிபிஎஸ் இறுதியாண்டில் தேர்ச்சி பெற்று, பயிற்சி மருத்துவர்களாகச் சேர உள்ளோருக்கு அவர்கள் சொந்த ஊர்களிலிருந்து தங்கள் கல்லூரிகளுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
* தற்பொழுது பயிற்சி மருத்துவத்தை முடித்து கரோனா மருத்துவ சேவைக்காக ஒரு மாத காலம் கட்டாயப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு அரசு மருத்துவர்களுக்கான ஊதியத்தை வழங்கிட வேண்டும். இந்தப் பணி நீட்டிப்புக் காலத்திற்கு ஜூனியர் ரெசிடென்டு எனச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
* கரோனா பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு,முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும்”.
இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.