முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா: முதல்வர் நிவாரண நிதிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம்; முத்தரசன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

முதல்வர் நிவாரண நிதிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம் வழங்குகிறது என, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 28) வெளியிட்ட அறிக்கையில், "புதுவகை கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் என்ற தீவிரமான நடவடிக்கை தொடர்கிறது.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீறி அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது வைரஸ் தொற்றின் தீவிரத்தை உணர்த்துகிறது. இந்த ஆட்கொல்லி நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையில் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது.

இந்தப் பெரும் சவாலை எதிர்கொள்ளத் தேவையான நிதியாதாரத்தை திரட்ட தமிழ்நாடு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வு உறுதி செய்ய தமிழ்நாடு அரசு திரட்டும் முதல்வர் நிவாரண நிதிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக ரூபாய் 10 லட்சம் நிதியை முதல்கட்டமாக வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதுடன், அனைத்துப் பகுதியினரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கி, கரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுத்து, வெற்றி பெற உதவிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT