திண்டுக்கல் மாவட்ட கிராமங்களில் படிப்படியாக கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனால் தத்தம் கிராமத்தை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் பல கிராமமக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் இரண்டு தினங்களில் திண்டுக்கல், பழநி நகர்புறங்களில் இருசக்கரவாகனத்தில் மக்கள் வழக்கம் போல் சென்றுவந்தனர்.
போலீஸார் தொடர்ந்து எச்சரித்ததின் பலனாக கடந்த இருதினங்களாக நகர்புறங்களில் வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் திண்டுக்கல் மாவட்ட கிராமப்புற மக்கள் வீட்டில் தனிமையில் இல்லாமல் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்காதவகையில் வழக்கமாக செயல்களில் ஈடுபட்டனர்.
ஆனால் கடந்த இருதினங்களாக கிராம மக்களிடம் படிப்படியாக கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. இதன்பயனாக கிராம மக்கள் தாங்களே முன்வந்து கிராமங்களை தனிமைப்படுத்த முடிவு செய்து செயல்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.
கிராம மக்களும் வீட்டிற்குள் இருக்கும் நடைமுறையை கடைப்பிடிக்க தொடங்கிவிட்டனர். மேலும் ஒட்டன்சத்திரம் அருகே அரண்மனைப்புதூர், கொடைக்கானல் மலைகிராமங்களான பேத்துப்பாறை, அஞ்சுவீடு, அஞ்சுரானமந்தை உள்ளிட்ட கிராமங்களுக்கும் நுழையும் சாலையை முற்றிலுமாக அடைத்துவிட்டனர்.
பேத்துப்பாறை கிராமத்திற்குள் அத்தியாவசிய தேவைக்கு நுழைபவர்களுக்கு ஊருக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள சோப்புகலந்த நீரில்
கையைக் கழுவிவிட்டு மற்றும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்படுகிறது. சில கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மேலும் பல கிராமங்களில் ஏற்படுவதன் மூலம் கரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கமுடியும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.