பிரதிநிதித்துவத்துக்கான சுட்டிப் படம்; கோப்புப் படம் 
தமிழகம்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் பெறுமான மதுபாட்டில்கள்: முத்துப்பேட்டை அருகே அதிர்ச்சி

செய்திப்பிரிவு

நாடு முழுதும் 21 நாட்கள் லாக்-டவுன் செய்யப்பட்டிருப்பதால் பலருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அரசாங்கங்கள் இலவச உணவு போன்ற திட்டங்களை தீட்டி வரும் நிலையில், மதுப்பிரியர்களை திருப்தி செய்து தன் சுய லாபத்தையும் ஈட்டிக்கொள்ள ரூ.2 லட்சம் பெறுமான மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவர போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த விளாங்காடு சமத்துவபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் அரசு மதுபானபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியபோது கிடைத்த தகவலின்படி அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டை சுற்றிவளைத்து அதிரடி சோதனை நடத்தினர். இதனையடுத்து அந்த நபர் தலைமறைவானார்.

பின்னர் போலீசார் வீட்டை சுற்றிலும் சோதனை நடத்தியதில் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு கொட்டகையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் ஏராளமான அட்டை பெட்டிகளில் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் அங்கிருந்து 45 அட்டை பெட்டிகளில் இருந்த சுமார் 2.50லட்சம் மதிப்புள்ள 2160 மது பாட்டில்களை பறிமுதல் செய்து முத்துப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT