தமிழகத்துக்கு ரூ.9,000 கோடி நிதி வழங்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (மார்ச் 28) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தாக்கம் அதிகமுள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு சோதனைகள், தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்தலும் சமூக பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்ததற்கு உங்களுக்கு நன்றி. இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த பணப்புழக்கம் மற்றும் வட்டி வீதக் குறைப்பு நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
ஊரடங்கை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு, ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் நலனை உறுதி செய்வது மாநில அரசுகளின் கடமை. தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா தொகுப்பின் மூலம் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன.
வரும் நாட்களில் இன்னும் நிவாரண நடவடிக்கைகள் தேவைப்படும். சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவப் பொருட்களின் தேவையை உறுதி செய்ய செலவுகள் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சியைச் சீராக்குவதற்கும், பல்வேறு துறைகள் அவற்றின் வளர்ச்சிப் பாதையில் திரும்புவதற்கும், நுகர்வு மற்றும் முதலீட்டுத் தேவையைத் தூண்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து அரசாங்கங்களும் வரி மற்றும் வருவாயில் கணிசமான குறைப்புகளை சந்திக்க நேரிடும். மேலும், சிறிது காலத்திற்கு வருவாய் திரட்டலை அதிகரிக்க முடியாது. இருப்பினும், செலவு தேவைகள் மற்றும் பொறுப்புகள் காத்திருக்காது.
2020 மார்ச் 25 தேதியிட்ட எனது கடிதத்தில் நான் உங்களிடம் குறிப்பாகக் கோரியது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத நிதி பற்றாக்குறை வரம்புகள் 2019-20 மற்றும் 2020-21 ஆகிய நிதியாண்டுகளுக்கு தளர்த்தப்படலாம். 2019-20 நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 33 சதவிகிதம் கூடுதல் கடன் வாங்குவது 2020-21 வரை அனுமதிக்கப்படலாம் என்பதை வலியுறுத்தினேன். இது கூடுதல் செலவுத் தேவைகளை பூர்த்தி செய்ய மாநிலங்களுக்கு உதவும்.
இது உடனடியாக மாநிலங்களுக்கு செலவினங்களை ஈடுகட்ட உதவும் என்றாலும், மாநிலங்கள் இயற்கையாகவே எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதில் ஒரு வரம்பைக்கொண்டுள்ளன. மேலும் அவை அதிகமாக கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்தும் கடமைகளால் முடங்கிவிடும். ஆனால், நுகர்வு மற்றும் முதலீட்டைத் தூண்டுவதன் மூலம் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான பொறுப்பு இந்த நேரத்தில் அரசாங்கங்கள் மீது விழுகிறது.
இந்திய பொது நிதி அமைப்பின் கீழ், இந்திய அரசால் மட்டுமே, இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் வாங்க முடியும். ஊரடங்கால் பொருளாதார தாக்கம் மிகவும் கடுமையானதாகவும், முன்னெப்போதும் இல்லாத வகையிலும் இருக்கும். இத்தகைய கடினமான காலங்கள் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும் மீண்டும் ஊக்கமளிப்பதற்கும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
எனவே, இந்திய அரசு, மாநில அரசுகள் கூடுதல் கடன் வாங்குவதற்கு அனுமதிப்பதோடு, மொத்த தொகையை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கரோனா வைரஸ் மற்றும் அதன் பின்விளைவுகளை எதிர்த்துப் போராட மாநில அரசுகளுக்கு சிறப்பு மானியமாக ரூ.1 லட்சம் கோடி வழங்க வேண்டும். இது மத்திய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான பிற நிதி பரிமாற்றங்களுடன் கூடுதலாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவின் விகிதத்தில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த நிதியை விநியோகிக்க முடியும். ஏனெனில், இந்த மானியத்தின் செலவினம் பொருளாதாரத்தை முதன்மையாகக் கொண்டு அதன் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த சிறப்பு விநியோகத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி மானியம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மிகவும் கடினமான மற்றும் சவாலான இந்த காலங்களில், தேசத்தின் நலனுக்காக தைரியமான, கடினமான மற்றும் வழக்கத்திற்கு மாறான முடிவுகளை எடுப்பதில் இருந்து விலகிச் செல்லாத ஒரு பிரதமராக, இந்த சிறப்புக் கோரிக்கையை நீங்கள் கருத்தில் கொண்டு தேவையான தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.