முதல்வர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் சிகிச்சைகளுக்காக பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் உள்ளிட்டோர் தங்களால் இயன்றதை நிதியுதவியாக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கலாம் என தமிழக அரசு ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தது. எப்படி நிதியுதவியை வழங்கலாம் என்ற வங்கி விவரங்களும் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (மார்ச் 28) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக முதல்வரின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தையும், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஓய்வூதியத் தொகையையும் அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் தமிழக மக்களையும் முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கக் கேட்டுக்கொள்கிறோம்" என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.