பெர்லின் 
தமிழகம்

மீன் விற்கலாம்; ஆனால் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது!- இடியாப்பச் சிக்கலில் மீனவர்கள்

என்.சுவாமிநாதன்

கோழிக்கறி சாப்பிட்டால் கரோனா பரவும் என சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் கோழிக்கறி விற்பனை அடியோடு சரிந்தது. அதேநேரத்தில் புரத உணவான மீனின் தேவை அதிகரித்தது. மக்களின் உணவுக் கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் மீன், மக்களுக்குத் தடையின்றி கிடைக்கும் வகையில், மீன் விற்பனைக்கு அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.

மீன் விற்பனைக்குத் தடையில்லை என்ற போதும் மீன்பிடிக்கக் கடலுக்குப் புறப்படும் மீனவர்களிடம் ஊரடங்கு உத்தரவைக் காட்டி வீட்டுக்குள் இருக்க வலியுறுத்துவதால் மீனவர்கள் கடும் குழப்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்கத்தின் குமரி மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கூறுகையில், ''பொதுவாக மீன்பிடித்து விட்டுக் கரைக்கு வந்ததும் பொது ஏல முறையில்தான் மீன் விற்பனை இருக்கும். ஆனால், அங்கு மீனை ஏலம் எடுக்க அதிக அளவில் கூட்டம் கூடும் என்பதால் மீனைச் சந்தைப்படுத்தக் கிடுக்கிப்பிடி போடுகிறார்கள். ஆனால், அரசு நினைத்தால் இதை முறைப்படுத்தலாம்.

காய்கறி, மளிகைக்கடைகளில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு பொருள்கள் கொடுப்பதைப் போல மீன் ஏலத்தையும் முறைப்படுத்தலாம். அப்படிச் செய்யாமல், கூட்டம் கூடுவதாகச் சொல்லி ஏலத்தைக் கலைக்கின்றனர்.

இதனால் மீன்கள் விற்பனைக்காக சந்தைக்கு வருவதே தவிர்க்கப்பட்டு விடுகிறது. அதேபோல் ஊரடங்கைப் பொறுத்தவரை மீனவ சமூகத்திற்குச் சரிபட்டு வராது. அவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வதுதான் பாதுகாப்பானது. வீட்டில் இருந்தால் குழுக்களாக சேர்ந்து இருந்துவிடும் வாய்ப்பு உண்டு.

அதனால் ஊரடங்கு கடல் தொழிலாளிகளுக்குப் பொருந்தாது. இது புரியாத அரசுப் பணியாளர்கள் மீனவ கிராமங்களில் ஊரடங்கைக் காரணம் காட்டி தொழில் முடக்கம் செய்கின்றனர். ஒருபக்கம் தொழில் முடக்கம், இன்னொரு பக்கம் மீன் விற்க அனுமதி என வேடிக்கையாக இருக்கிறது அதிகாரிகளின் நடவடிக்கை'' என்றார்.

SCROLL FOR NEXT